நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே போன்ற யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சான்றிதழ், உணவுபொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாவட்டந்தோறும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நியாயவிலைக் கடைகளுக்கு அருகில் தேவையான காலி இடம் இருப்பின் அவ்விடங்களில் உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கும், நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை பாதுகாப்பாக இரும்பு பலகைகளின் மீது அடுக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
மீன் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க 60 சதவீதம் அரசு மானியம்
Share your comments