நிகழாண்டு காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் (R. Kamala kannan) கூறியுள்ளார். புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காரைக்காலில் நடைபெற்றது. அரசு செயலாளரும், அபிவிருத்தி ஆணையருமான அ.அன்பரசு தலைமை வகித்தார். வேளாண்துறை இயக்குநர் ஆர்.பாலகாந்தி (எ) சிவராமகிருஷ்ணன் வரவேற்றார்.
வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு:
அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை (Crop production incentives), வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கான மானியம் (Subsidy) உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி (V. Narayanasamy) வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காவிரி நீர் தொடர்பான நீண்ட சட்டப் போராட்டத்தில் காரைக்காலுக்கு 7 டிஎம்சி (7TMC) தண்ணீர் வழங்க வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை
வேளாண்துறை மூலம், விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் என்னென்னெ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது பல விவசாயிகளுக்குத் தெரியாத நிலை கடந்த காலங்களில் இருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. நம்மாழ்வார் விவசாயப் புனரமைப்பு திட்டம் (Nammazhvar Agricultural Reconstruction Project) என்ற திட்டம் கடந்த நிதியாண்டு அறிவிக்கப்பட்டது. பல நெருக்கடியான சூழலிலும், அறிவிக்கப்பட்ட ஆண்டிலேயே வேளாண்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நெல், பருத்தி, பயறு என சாகுபடி (Cultivation) செய்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். வேளாண்துறை மூலம் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அறிந்து, பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் எல்லோரும் முன்னுக்கு வர வேண்டும்.
கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, காலதாமதமானதால் விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்லை. நிகழாண்டு எஃப்.சி.ஐ மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தோனி விளைவித்த இயற்கை காய்கறிகள் துபாய்க்கு ஏற்றுமதி! காரணம் என்ன?
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!
விவசாயிகளிடம் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்யும் அரசு!
Share your comments