School students
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை (திங்கட்கிழமை) முதல் 1 - 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே, விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு (Schools Open)
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதே சமயம்,பள்ளிகள் துவங்கும் நேரம்,முடிவடையும் நேரம் எப்போது என்பதை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், எனினும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே,2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,
பொதுத்தேர்வு (Public Exam)
2023 மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கும்.
2023 மார்ச் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கும்
2023 ஏப்ரல் 3-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்றும் கூறினார்.
மாணவர்களுக்கு காலை உணவு (Breakfast for Students)
ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. மாறாக, பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டத்தை எப்போது தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது. பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments