தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று ஆய்வு செய்தார். கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
மேலும் பேசிய அவர், உலகம் முழுவதும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாநிலங்களில் 6 ஆயிரம் வரை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனிடையே தமிழகத்திலும் பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் 50% சென்னையில் பதிவாகியுள்ளது.
எனவே சென்னை, சேலம், நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகும் மாவட்டங்களில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார். சென்னையில் மட்டும் 2,225 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சியின் களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார். சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு அதிகமாகவும் 25 தெருக்களில் 5 பேருக்கு அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களில் 92% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிஏ4,பிஏ5 கொரோனா வைரஸ் தான் அதிகளவில் பரவி வருகிறது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது என்ற அமைச்சர் தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று எச்சரித்தார்.
மேலும் தங்களது குழந்தைகளை சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம் என்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க:
Share your comments