விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் மகாராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் இயங்கிவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆல் தி சில்ட்ரன்ஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளையல் அணி விழா நடைபெற்றது. இந்த விழாவினை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வீட்டு முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை மருத்துவர்கள் செவிலியர்கள் இணைந்து நடத்தினர். கர்ப்பிணிகளுக்கு முதலில் வளையல் அணிவித்து, கன்னத்தில் சந்தனம் பூசி, பன்னீர் தெளித்தும்,மலர்கள் தூவியும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு வரிசை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்ப்பிணி தாய்மார்கள் கூறியதாவது, “வீட்டில் முறைப்படி செய்வது போன்று எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருத்துவமனைக்கு நாங்கள் வருவது, அம்மா வீட்டிற்கு வருவது போன்ற உணர்வை தரும். மருத்துவர்கள் மூலம் இந்த வளைகாப்பு நடத்தப்படுவதை கேட்டதும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பின்பும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும், அறிவுரைகளையும் எங்களுக்கு வழங்கினர். ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி இங்கு நடத்தப்பட்டது. இறுதியாக பழவகைகள் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கினர்.வயிறும் மனதும் முழு அளவில் நிரம்பியதாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் கர்ப்பிணிகள் தெரிவித்தனர்.
Share your comments