அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண் இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவு நகைக்கடை வியாபாரிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்க நகை விற்பனை சார்ந்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் இடம்பெற வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
ஹால்மார்க் தங்கம்
தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய அரசு தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை அறிமுகம் செய்தது. 2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரையைமத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களிலும் 2-ம் கட்டமாக 32 மாவட்டங்களிலும் என மொத்தம் 288 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது.
6 இலக்க தனித்த எண்
ஹால்மார்க் முத்திரை கட்டாய மாக்கப்படாத மாவட்டங்களிலும், பெரும்பான்மையாக ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளே விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
கூட்டத்தில் முடிவு
இதுகுறித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் நடைபெற்ற இந்திய தர நிர்ணய அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஹால்மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்த அடையாள எண் வழங்கப்படுகிறது. ஹால்மார்க் செய்யப்படும்போதே தனித்த அடையாள எண் வழங்கப்படுவதும் உண்டு. தற்போது 4, 6 இலக்கங்களில் இந்த அடையாள எண் வழங்கப்படுகிறது.
கலக்கம்
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நகைக்கடை வியாபாரிகளைக் கலக்கம் அடையச் செய்துள்ளது. ஹால்மார்க் இல்லாதத் தங்கத்தை விற்பனை செய்வோர், இனி தங்கள் விற்பனையைத் தொடர இயலாத நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க…
Share your comments