உலகளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலானவை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 1ம் தேதி 2022 முதல்' ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து, IRCTC விரைவில், இந்திய ரயில்வேவின் கேட்டரிங் துறையிலிருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவுள்ளது. தட்டுகள், கரண்டிகள், கோப்பைகள், கண்ணாடிகள், பார்சல் பாக்ஸ்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் போன்றவை விரைவில் மாற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த மாதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை வதித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது என்னென்ன மாதிரியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கலாம் என்பது போன்ற வழிகாட்டுதல் நடைமுறைகளை உருவாக்கும் பணியில், இரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று வழிகள் குறித்தும் இரயில்வே அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பயணிகளுக்கு பாக்குமட்டை, மரம், அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக உணவு வழங்கலாம் என மத்திய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட, ஒரு மாற்றுப்பொருளை நிர்ணயம் செய்யும் வரை, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்கும் படி இரயில்வேவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல் (விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன்), பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள் மற்றும் இனிப்புப் பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளைச் சுற்றி ஃபிலிம் செய்யப்படும் பிளாஸ்டிக் உறை, 100-மைக்ரான் தடிமனுக்கும் குறைவானது பிளாஸ்டிக் அல்லது PVC பேனர்கள், 75-மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் கேரி பேக்குகள் (இது டிசம்பர் 31, 2022 முதல் 120-மைக்ரான் தடிமனாகத் திருத்தப்படும்) என ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதனால் அத்தியவாசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
தடையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs) கண்காணித்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி, இருப்பு, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
PF கணக்கில் 40,000 ரூபாய் டெபாசிட்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Share your comments