ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெவ்வேறு இடங்களில், வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் 55 ஆயிரம் வாழைகள் (Banana trees) முறிந்து நாசம் ஆனது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகிறது. அவ்வாறு புகுந்து விடும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழை, மக்காச்சோளம் (Maize), கரும்பு போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்திவிடுகின்றன.
சூறாவளிக்காற்று
சத்தியமங்கலம் அருகே உள்ளது ராஜன் நகர், புதுப்பீர்கடவு. முற்றிலும் விவசாய பகுதியான இங்கு ஏராளமான விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடைக்கு (Harvest) தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சத்தியமங்கலம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைத்தொடர்ந்து பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றில் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜன் நகர் பகுதியை சேர்ந்த ரவி, குமார், மகேந்திரன், புதுப்பீர்கடவு பகுதியை சேர்ந்த ராஜன் உள்பட அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து நாசம் (Damage) ஆனது. இதேபோல் டி.என்.பாளையம், காளியூர், ஏழூர், மோதூர், கொங்கர்பாளையம், மூலப்பாளையம், கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், வேட்டுவன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் பூவன், நேந்திரம், ரொபஸ்டா, கதலி போன்ற வாழைகளை பயிரிட்டு உள்ளனர். பலத்த சூறாவளிக்காற்றால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசம் ஆனது.
வாழைகள் முறிந்து நாசம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ராஜன் நகர் மற்றும் புதுப்பீர்கடவு பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலரும் நேந்திரம், செவ்வாழை உள்பட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டு உள்ளனர். நகைகளை வங்கிகளில் அடகு வைத்தும், பலரிடம் கடன் வாங்கியும் வாழைகளை விவசாயிகள் சாகுபடி (Cultivation) செய்து உள்ளனர். ஆனால் சூறாவளிக்காற்றால் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆகி விட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சத்தியமங்கலம் தாசில்தார் இங்கு வந்து பார்வையிட்டு முறிந்து விழுந்து நாசம் ஆன வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
யானைகள் அட்டகாசம்
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியை அடுத்த கெட்டவாடியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 48). விவசாயி. இவர் தன்னுடைய 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 யானைகள் துரைசாமியின் தோட்டத்துக்கு வந்து உள்ளன. பின்னர் அந்த யானைகள் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை பிய்த்து எறிந்துவிட்டு தோட்டத்துக்குள் புகுந்தன. இதைத் தொடர்ந்து தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின.
இழப்பீடு
இதைத்தொடர்ந்து அவர் அருகில் உள்ள விவசாயிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் (Forest Department) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த 4 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம் ஆனது. யானைகள் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் எனவும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை (compensation) சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!
கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!
Share your comments