சாமானிய மக்களை எதிர்பாராத நேரத்தில் வாட்டி வதைக்கும் பொருளாதாரச் சுமை, சில சமையங்களில் பெரிய பெரிய நிதி நிறுவனங்களைக்கூட புரட்டி எடுக்கும். ஏன் வங்கிகள் கூட இந்த நிதிச்சுமை சுனாமியிடம் இருந்து தப்ப முடியாது போலும்.
அதிரடி உத்தரவு
அப்படியொரு பிரச்னையை வங்கிகள் எதிர்கொள்ள நேரும்போது, அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் நிலை சற்று கொடுமையானதாகவே மாறும். அப்படியொரு சம்பவம்தான் இங்கு நிகழ்ந்திருக்கிறது. அதாவது 5000 ரூபாய்க்கு மேல் இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
எந்த வங்கி?
தொடர்ந்து செயல்பட முடியாமல் தவிக்கும் வங்கிகளிடம் இருந்து அவற்றின் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சங்கர் ராவ் மொஹிதே பாட்டில் சஹகாரி வங்கி (Shankarrao Mohite Patil Sahakari Bank) மீது ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பணம் எடுக்க தடை
இந்த வங்கி மீதான கட்டுப்பாடுகளால் அதன் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
என்ன காரணம்?
வங்கியின் நிதிநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அதன் வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும் என்ற சந்தேகத்தில் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
6 மாதங்களுக்கு
இந்த தடை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு தடை நீடிக்கும். தேவைப்பட்டால் அந்த சமயத்தில் இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, புதிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் டெபாசிட் பெறுவதற்கும் இந்த வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பீதி
வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி எடுக்கும் இதுபோன்ற அதிரடியான நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் அதில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். தங்களது டெபாசிட் பணத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அச்சம் வேண்டாம்
பொதுவாக வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுபோல திடீரென்று பாதிப்பு ஏற்படும்போது இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். எனவே வங்கியில் பணம் போட்டவர்கள் பயப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments