இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக தனது சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நேற்று முன் தினம் வீடியோ காணொளி வாயிலாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் தினேஷ் காராவால் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் வங்கி சேவையாளர்கள் மற்றும் கார்ப்ரேட் பணியாளர்களுக்கு ஏபிஐ (அப்ளிகேஷன் இன்டர்ஃபேஸ் ஃபுரோகிராமிங்) மூலமாக சேவைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி சேவை (Bank Service)
ஏபிஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்குமான சேவை இணையசேவை மூலம் தனிப்பட்ட முறையில் இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வசதியை அளிப்பதுடன் பாதுகாப்பான பணபரிவர்த்தனைக்கும் வழி வகுக்கிறது. அந்த வரிசையில் தற்போது எஸ்.பி.ஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சேவையை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் சில குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். ஆனால் அவை என்னென்ன சேவைகள் என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்சமயம் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த வாட்ஸ் அப் சேவையானது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கிறது. இந்த சேவையானது வாட்ஸ் அப் கனெக்ட் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவையின் மூலம் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு குறித்த பணபரிவர்த்தனை விவரங்கள், பணம் இருப்பு குறித்த விவரம், ரிவார்டு பாய்ண்ட்ஸ், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பணபரிவர்த்தனை குறித்த விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அறிந்து கொள்ள முடியும்.
உங்களுக்கு இந்த சேவை வேண்டுமென்றால் உங்களது வாட்ஸ் அப் எண்ணிலிருந்து 'OPTIN' என டைப் செய்து 9004022022 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இல்லையென்றால் 08080945040 என்ற எண்ணிற்கு வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் எண்ணில் இருந்து மிஸ்டுகால் கொடுத்தும் சேவையை பெறமுடியும். இன்னொரு வழியில், எஸ்.பி.ஐ வங்கி ஆப்பில் சைன் அப் செய்வதன் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெறமுடியும்.
சேவை அளிக்கும் வங்கிகள்
முன்னதாக வாட்ஸ் அப் மூலமாக வழங்கப்படும் இந்த சேவையை ஹெச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஆக்ஸிஸ் மற்றும் ஐடிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்!
PF உயரும்: ஆனா டேக் ஹோம் சம்பளம் குறையும்: அமலுக்கு வரும் புதிய விதி!
Share your comments