இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், இப்போது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் முகக் கவசத்தை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 90 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் (Corona Virus spreading)
தஞ்சாவூரைச் சேர்ந்த, 18 வயது இளம்பெண் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இது அனைவரிடத்திலும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ4 மற்றும் பிஏ5 தீநுண்மிகளால், இதுவரையில் அச்சுறுத்தும் வகையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் இப்போது, இணைநோய்கள் ஏதுமில்லாமல், கொரோனாவால் இளம்பெண் உயிரிழந்திருப்பது, பல கேள்விகளை எழுப்பி வருகிறது.
தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 8.4 மற்றும் 9.1 என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்ததாக கோவையில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.7 ஆக உள்ளது. கடைசியாக, தமிழகத்தில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். கடந்த இரு வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இருப்பினும், உயிரிழப்பு இல்லாததால் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், நேற்று சென்னையில் இளம்பெண் இறந்ததையடுத்து, கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 7,45,046 ஆக உயர்ந்துள்ளது; 9,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர். முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments