கூடலூர் பகுதியில் பாகற்காய் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. ஆனால் கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர் பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கோடைகால பயிரான பாகற்காய், புடலங்காய், பஜ்ஜி மிளகாய் உள்ளிட்டவற்றை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலகுறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் நிலங்களை பதப்படுத்தி பாகற்காய் நாற்றுகளை நட்டு விவசாயிகள் பராமரித்து வந்தனர். தற்போது பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. விளைந்த பாகற்காய்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அறுவடை
கூடலூர் பகுதியில் பாடந்தொரை, தொரப்பள்ளி, தோட்டமூலா, அள்ளூர் வயல், ஸ்ரீ மதுரை, முதுமலை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் அறுவடை (Harvest) செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மூட்டைகளாக கட்டி மார்க்கெட்டுகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் பாகற்காய் பயிருக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொரோனா (Corona) பரவல் காரணமாக கேரள சந்தைகளிலும் பாகற்காய் விற்பனை போதிய அளவு களை கட்டவில்லை.
இதனால் கூடலூர் பகுதியில் விளையும் பாகற்காய்களை கேரளா மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. நியாயமான விலை கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ பாகற்காய் ரூ.22 வரை மட்டுமே கொள்முதல் விலை கிடைக்கிறது. சில சமயங்களில் ரூ.20 ஆக விலை குறைந்து விடுகிறது. சுமார் ரூ.30-ல் இருந்து 40 வரை விலை கிடைத்தால் மட்டுமே லாபம் (Profit) கிடைக்கும்.
ஆனால் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வியாபாரிகள் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கேரள வியாபாரிகளும் வரத்து இல்லை. இதனால் நியாயமான விலை கிடைக்கவில்லை பாகற்காய் விவசாயிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments