இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த பாலிவுட் பாடகி, இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. லதா மங்கேஷ்கருக்கு வயது 92.
மஹாராஷ்டிராத் தலைநகர் மும்பையை சேர்ந்தவர், பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
கொரோனா
இவருக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தெற்கு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தநிலையில், முறையான சிகிச்சையால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தீவிர சிகிச்சை
ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் லதா மங்கேஷ்கரின் உயிர் பிரிந்தது. தனது தன்னிகரில்லா இசை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த லதா மங்கேஷ்கருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டத் தலைவர்களும், திரை உலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரையுலகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.
திரையுலகம் கண்ணீர்
இந்தியாவின் இசைக்குயில் என வருணிக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி, நாடு முழுவதும் இன்றும் நாளையும் 2 நாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட உள்ளது. இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதிச்சடங்கு
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments