1. செய்திகள்

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

R. Balakrishnan
R. Balakrishnan
Cauvery
Credit : DT Next

தமிழகத்திற்கு ஜூலை மாத இறுதிக்குள், காவிரியில் 40.43 டி.எம்.சி., நீரை திறக்க, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் (Cauvery Management Authority) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வரும் நிலையில், ஆணையத்தின் உத்தரவு சாதகமாக அமைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிலுவையில் 3.42 டி.எம்.சி.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு நீர் வழங்கும் தவணை காலம், ஜூன் மாதம் துவங்குவது வழக்கம். நடப்பு மாதத்தில் 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், 23ம் தேதி நிலவரப்படி, 7.04 டி.எம்.சி.,க்கு பதிலாக, 3.62 டி.எம்.சி.,யை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. இதனால், 3.42 டி.எம்.சி., நிலுவையில் உள்ளது.

12வது கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம், அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழக பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' (Video Conference) வாயிலாக பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே, எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஆணைய தலைவரிடம் வலியுறுத்தினர். டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. எனவே, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி., ஜூலையில் 31.24 டி.எம்.சி., நீரை, முறைப்படி திறக்க வேண்டும் என்றும், தமிழகம் தரப்பில், ஆணைய கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

உத்தரவு

தமிழகத்திற்கு 40.43 டி.எம்.சி., நீரை, ஜூலை மாத இறுதிக்குள் திறக்கும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜூலை 20ம் தேதிக்கு பின் நடக்கும் என, கூறப்பட்டது. தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மேகதாது அணை, காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து விவாதிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. காவிரி ஆணையத்தின் அதிரடி உத்தரவால், டெல்டா விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழக அரசுக்கும், காவிரி விவகாரத்தில் நெருக்கடி குறைந்துஉள்ளது.

மேலும் படிக்க

வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!

நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் அமைக்க 7 கிராமங்கள் தேர்வு!

English Summary: Cauvery Management Authority orders to open water to Tamil Nadu in Cauvery! Published on: 26 June 2021, 07:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.