இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவிக்கையில் சந்திராயன்-3 திட்டத்தின் மிக முக்கியமான பகுதியாக, லேண்டரின் வேகத்தை 30 கி.மீ உயரத்தில் இருந்து இறுதி தரையிறக்கம் வரை குறைப்பது மற்றும் விண்கலத்தை கிடைமட்டத்திலிருந்து செங்குத்து திசையில் (vertical position) மாற்றும் திறன் ஆகியவை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகின் வல்லரசு நாடுகளின் கவனமும் இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டத்தினை நோக்கி திரும்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டில், இஸ்ரோ சந்திராயன் -2 ஐ நிலவின் தென் துருவத்தில் இறக்க முயற்சித்தது. ஆனால் அந்த நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
அதே தவறுகளை மீண்டும் செய்யாமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தின் தொழில்நுட்பத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளனர். இஸ்ரோ, சந்திரயான் -3 ஐ ஜூலை 14 அன்று விண்ணில் ஏவியது, பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னர் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 6 மணியளவில் நிலவின் தென் பகுதியில் தரையிறங்க உள்ள நிலையில், இறுதி 20 நிமிடம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 நிமிடங்களில் காத்திருக்கும் சிக்கல் என்ன?
நிலவின் தரையிறங்கும் கடைசி நிமிடங்கள் (17 முதல் 20 நிமிடங்கள்) முழு செயல்முறையும் தன்னாட்சியாக (automatic mode) மாறும். அச்சமயம், விக்ரம் லேண்டர் அதன் இயந்திரங்களை சரியான நேரத்தில் தரையிறங்க வைக்க வேண்டும். மேலும், சரியான அளவு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். நிலவின் மேற்பரப்பில் ஏதேனும் தடைகள் அல்லது குன்றுகள் அல்லது பள்ளங்கள் உள்ளதா என ஸ்கேன் செய்ய வேண்டும்.
இஸ்ரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, தரையிறங்குவதற்கு, சுமார் 30 கிமீ உயரத்தில், லேண்டர் அதன் நான்கு த்ரஸ்டர் என்ஜின்களை "ரெட்ரோ ஃபயர்" மூலம் சந்திரனின் மேற்பரப்பை அடைய, படிப்படியாக வேகத்தைக் குறைப்பதை தொடங்க வேண்டும். நிலவின் ஈர்ப்பு விசையும் பிரச்சினையாக மாறும் என்பதால், லேண்டர் விபத்துக்குள்ளாகாமல் பார்த்துக்கொள்வதற்காக இது செய்யப்படுகிறது.
ஏறக்குறைய 6.8 கிமீ உயரத்தை எட்டும்போது, இரண்டு என்ஜின்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மற்ற இரண்டும் தனது பணியை நிறுத்தும். லேண்டரை மேலும் கீழிறங்கும்போது (100- 150 மீட்டர்) ரிவர்ஸ் த்ரஸ்ட்டைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு லேண்டர், அதன் சென்சார்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி, மேற்பரப்பை ஸ்கேன் செய்து, ஏதேனும் தடைகள் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பின்னர் மெதுவாக தரையிறங்குவதற்கு தொடங்கும்.
லேண்டர் மெதுவாக தரையிறங்கிய பிறகு, ரோவர் லேண்டரிலிருந்து சந்திரனின் மேற்பரப்பில், அதன் பக்க பேனல்களில் ஒன்றைப் பயன்படுத்தி இறங்கும். பின்னர் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் நிலவு குறித்து நாம் அறிந்திராத பல தகவல்களை சேகரித்து நமக்கு அனுப்பும். இது நிலவு குறித்த ஆராய்ச்சியில் மிகப்பெரும் முன்னெடுப்பை தொடங்கி வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் காண்க:
நிலவில் தரையிறங்கும் சந்திராயன் 3- நேரலையில் பார்ப்பது எப்படி?
Share your comments