தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
வரும் 30ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 31ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
வரும் டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Share your comments