நாடு முழுவதும் மாநில அரசுகள் அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மாநிலத்திற்கு ஏற்ப அதில் மாற்றங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்தாண்டு மத்திய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவு திட்டத்தையும் தொடங்கி வைத்தது.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு அங்கு மத்திய உணவு திட்டத்தில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, தற்போது வழங்கப்படும் உணவுகளுடன் கூடுதலாக கோழிக்கறி மற்றும் பழங்களை மத்திய உணவில் வழங்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு மத்திய உணவு திட்டத்தின் கீழ் சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர். தற்போது சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.
சிறார்களின் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு சிக்கன் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரி முதல் ஏப்ரல் வரை வாரம் தோறும் சிக்கன் மற்றும் பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும், இதற்காக கூடுதலாக ரூ.371 கோடி ஒதுக்கப்படும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.ஏப்ரலுக்குப் பின் இந்த திட்டம் தொடருமான என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த திட்டம் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு 60 சதவீத நிதியும், மத்திய அரசு 40 சதவீத நிதியும் வழங்குகிறது. இன்னும் சில மாதங்களில் அம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிராமப்புற மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவே மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்துள்ளது. அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்து குறை கூறுவது தான் பாஜகவின் வேலை என ஆளும் திரிணாமுல் கட்சி பதில் தந்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments