மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில், தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், அரிசி அட்டைதாரர்களுக்கு, புழுங்கல், பச்சை அரிசி வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் அரிசியில், மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் உள்ளன. நாடு முழுதும், பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அதற்கு, அவர்களின் உடலில் போதிய ரத்தம் இல்லாததே முக்கிய காரணம்.
இதையடுத்து, மத்திய அரசு, ரேஷனில், ரத்த உற்பத்தியை அதிகரிக்க கூடிய இரும்பு சத்துக்கள் அடங்கிய, செறிவூட்டப்பட்ட அரிசியை, மாநில அரசுகளுடன் இணைந்து வழங்குகிறது.
இந்த அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் 'வைட்டமின் - பி 12' ஆகிய சத்துக்கள் உள்ளடங்கி, ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்கும். இதனை சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை பிரச்னை ஏற்படாது.
தமிழகத்தில், திருச்சியில்,ரத்த சோகை பிரச்னையால், அதிகம் பேர் இருப்பதாக, மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், முதல் கட்டமாக, திருச்சியில் உள்ள கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, செறிவூட்டப்பட்ட அரிசி, அக்டோபர் முதல் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில், இருந்தபடி, காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
தயாரிப்பது எப்படி?
அரவை ஆலைகளில், நெல்லை அரிசியாக மாற்றும் போது, மறுபுறம் அரிசிமாவில், இரும்பு சத்து, போலிக் அமிலம், 'வைட்டமின் - பி௧2' ஆகிய சத்துக்கள் கலந்த கலவை உருவாக்கப்படும். அந்தக் கலவை, இயந்திரங்கள் உதவியுடன் அரிசி வடிவில், செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப் படும். இதையடுத்து, 100 அரிசிக்கு, ஒரு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற வீதத்தில், ரேஷன் அரிசியுடன் சேர்க்கப்படும். இவ்வாறு, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட உள்ளது. இதேபோல், தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க...
அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
Share your comments