மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 1.7 கோடி மகளிருடைய நிதி சுதந்திரத்தையும் உறுதி செய்ய அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாவற்றையும் கவனமாக குறித்து வைத்துள்ளதாகவும் நிச்சயமாக அதை மிக விரைவில் நிறைவேற்றி தருவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு.
கோரிக்கைகள் குடிநீர் பிரச்சனையைப் பற்றி சொன்னீர்கள், ரேஷன் கடையைப் பற்றி சொன்னீர்கள், அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இருக்கக்கூடிய இடையூறுகளைப் பற்றிச் சொன்னீர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், இப்படி பல கோரிக்கைகள் இருக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் இன்றைக்கு கவனமாக குறித்து வைத்துக்கொண்டு, நிச்சயமாக, உறுதியாக அதையெல்லாம் மிகமிக விரைவில், அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக்கிறோம்.
அரசின் குறிக்கோள் இப்பொழுது நான் அறிவித்துள்ள திட்டங்கள் மட்டுமன்றி இன்னும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராம அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் அடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய குறிக்கோளாக இருக்கிறது. அதன் மூலம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்வு வளம் பெற வேண்டும் என்ற வகையிலேதான் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் ஏதோ அறிவிப்புகளுக்கு அறிவித்துச் சென்றுவிட்டேன் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.
நாங்கள் எப்போதுமே, நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் சொன்னதைத்தான் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்ற அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. அதை நான் நிச்சயமாக உணருகிறேன். எனவே, இது நடந்து முடிந்திருக்கிறதா என்பதை அவர்களிடத்தில் தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ கேட்டு மட்டும் அல்ல, நேரடியாக வந்து அடுத்த முறையும் நான் வந்து பார்ப்பேன் என்ற அந்த உறுதிமொழியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
மேலும் படிக்க
Share your comments