உலகையே நடுங்க வைத்த கொரோனா வைரஸினால் (Corona Virus), மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அரசு, மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது. அதனால், மிகவும் பாதுகாப்பான முறையில் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில், காய்கறிகள் விற்பனை நடந்து வந்தது. ஓரிரு வாரங்கள் சென்றதும், கோயம்பேடு சந்தையில், சில வியாபாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கோயம்பேடு சந்தை (Coyambedu Market) தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கு மாற்றாக, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு விற்பனை நடந்து வந்தது.
திருமழிசை சந்தை:
கோயம்பேடு சந்தை, திருமழிசைக்கு மாற்றப்பட்டதும் ஆரம்பத்தில் விற்பனை மிகக் குறைவாகவே இருந்தது. இதனால், வியாபாரிகள் (Merchants) மனவருத்தத்தில் இருந்தனர். பிறகு, அன்றாடத் தேவைகளுக்காக, மக்கள் திருமழிசை நோக்கிப் படையெடுக்க, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இருந்தாலும், வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க, கோரிக்கை வைத்தனர்
கோயம்பேடு சந்தை திறப்பு:
தற்போது, ஊரடங்கில் பல தளர்வுகள் வந்தவுடன் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று, வியாபாரிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, சந்தையை முழுவதும் ஆராய்ந்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை (Safety Precautions) மேற்கொண்டது. பிறகு, கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட், சில நிபந்தனைகளுடன் மீண்டும் செப்டம்பர் 27 அன்று, இரவு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, திருமழிசையில் இயங்கி வந்த 194 கடைகள், கோயம்பேடு மார்க்கெட்டில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மொத்த வியாபாரி கடைகள் 600 சதுர அடியிலிருந்து, 1200 சதுர அடி உள்ள கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
விற்பனை நேரம்:
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்க, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை, மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மார்க்கெட் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் (CCTV Camera) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களுக்கு இரவு 9 முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
வியாபாரிகள் மகிழ்ச்சி:
வெறிச்சோடிக் கிடந்த கோயம்பேடு சந்தை தற்போது திறக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது குறைந்த அளவு கடைகள் திறக்கப்பட்டாலும், இனி கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் கடைகளும் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், தங்கள் விற்பனை பாதுகாப்பான முறையில், தங்கு தடையின்றி நிகழும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மக்களுக்கும் இனி, காய்கறிகள் வாங்குவதில் சிரமம் இருக்காது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!
வெங்காயத்தைப் பாதுகாக்கும், பழங்கால வெங்காயப் படல் முறையில், விற்பனையும், விதை சேமிப்பும்!
தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு, மதுரை ஐகோர்ட்டின் அசத்தலான அறிவுறை! இனி சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது!
Share your comments