1. செய்திகள்

காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவாதம்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Cloud discussion

மேகதாது குறித்து காவேரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது தொடர்பாக விவாதமா?

மேகதாது குறித்து காவேரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியதற்க்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார், 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 16-06-2022 அன்று நான் வேண்டுகோள் விடுத்த நிலையில், ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவரே நேற்று முன்தினம் கூறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நேற்று முன்தினம் காலை காவேரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு, மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆய்விற்குப் பிறகு பேட்டி அளித்த காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகதாது அணை குறித்து 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று கூறுவது தவறு என்றும், தமிழ்நாடு அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப் பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவேரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவேரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

அதைவிடுத்து, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படுவது என்பது மேலும் கூடுதலாக 67 டிஎம்.சி. நீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவதற்குச் சமம்.

இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறையும். ஏற்கெனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அதையும் மீறி அந்தப் பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமேயானால், இந்தப் பொருள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும், ஆணையத்தின் ஆய்வு வரம்பில் 'மேகதாது அணை' இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

TNPSC: 2 கட்டங்களாக கணினி வழியில் தேர்வு! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

English Summary: Cloud discussion at Cauvery Management Commission meeting Published on: 19 June 2022, 05:11 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.