தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கூட்டுறவு மருந்தகம், மற்றும் பல்பொருள் அங்காடிகளை, இரவில் கூடுதல் நேரம் திறக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்பது என அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மருந்து மற்றும் மாத்திரை வாங்க வேண்டிய இக்கட்டடில் உள்ள ஏழைகள், தள்ளுபடி விலையில் இங்கு மருந்துகளை வாங்கிப் பயனடையலாம்.
20 சதவீத தள்ளுபடி
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், காமதேனு, சிந்தாமணி, அம்மா உள்ளிட்ட பெயர்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்களை நடத்தி வருகின்றன. கூட்டுறவு மருந்தகங்களில், 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், பலரும் அந்த மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பணி நேரம்
அதில், சென்னையில் செயல்படும் சங்கங்கள் நடத்தும் அங்காடிகள், மருந்தகங்கள் காலை, 9:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையும்; மற்ற மாவட்டங்களில் இரவு 8:00 மணி வரையும் செயல்படுகின்றன.
தனியார் நிறுவனங்களின் பல்பொருள் அங்காடிகளும், மருந்தகங்களும் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இதையடுத்து, கூட்டுறவு மருந்தகம், பல்பொருள் அங்காடிகளையும் இரவில் கூடுதல் நேரம் திறக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
கோரிக்கைகள்
இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளையும், மருந்தகங்களையும் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைக்குமாறு, வாடிக்கையாளர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
ஷிப்ட்
எனவே, அவற்றை இரவில், 10:00 அல்லது 11:00 மணி வரை திறந்து வைக்க முடிவு செய்யப் பட்டு உள்ளது.அதேசமயம், கூடுதல் பணிச்சுமை ஏற்படாத வகையில், இரண்டு, 'ஷிப்ட்'களில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, தனியாருக்கு இணையாக கூட்டுறவு கடைகளிலும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். குறிப்பாக மருந்து, மாத்திரைகளுக்கு அதிகம் செலவு செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பயன் அடையலாம்.
மேலும் படிக்க...
பெண்களுக்கு சூப்பர் வசதி- ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments