பொள்ளாச்சி பகுதியின் முக்கிய, விவசாய உற்பத்தி பொருளான தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க, தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும். கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையில், மாநில அரசின் கொள்முதலை உடனடியாக துவங்க வேண்டும், என்ற விவசாயிகளின் குரல் வலுத்துள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை பகுதியில், தென்னை சாகுபடி அதிகமுள்ளது. தென்னை பொருட்கள் சார்ந்த பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், தேங்காய்க்கு நிலையான விலையின்றி விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகத்தில், இடைத்தரகர்கள், வியாபாரிகள் 'சிண்டிகேட்' அமைத்து, விலையை ஏற்றியும், இறக்கி வருகின்றனர். தங்கள் சுய லாபத்துக்காக, விவசாயிகளின் வருவாயை சுரண்டுவது பல ஆண்டுகளாக அரங்கேறுகிறது.
அடிப்படை ஆதார விலை
தேங்காய் விலையை நிர்ணயிக்கும் கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக எழுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில், மத்திய அரசு, எண்ணெய் கொப்பரை கிலோவுக்கு, 105.90 ரூபாய்; பந்து கொப்பரை கிலோவுக்கு, 110 ரூபாய் அடிப்படை ஆதார விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலை தற்போதுள்ள பராமரிப்பு செலவுகளுக்கு கட்டுப்படியாகாது என்பதால், மாநில அரசு தன் பங்குக்கு ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தது, 15 ரூபாய் அடிப்படை ஆதார விலையாக வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கனவே, வெள்ளை ஈ தாக்கம், கேரள வாடல் நோய், ஈரியோபைட் சிலந்தி தாக்கம் என பல்வேறு பிரச்னைகளால் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, பராமரிப்பு செலவு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசின் இந்த ஆதரவு மிகவும் அத்தியாவசியம், என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், மலேசிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய்க்கு மாநில அரசு மானியம் அளித்து, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்கிறது. வெளி சந்தையில் கிலோ, 122 ரூபாய் வரை விற்பனையாகும் பாமாயில், ரேஷன் கடைகளில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்காக, மாநில அரசு பல கோடி ரூபாய் மானியம் ஒதுக்குகிறது.
மானியம் (Subsidy)
வெளிநாட்டு உற்பத்தி பொருளான பாமாயிலுக்கு மானியம் வழங்குவதற்கு பதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியம் மிகுந்த தேங்காய் எண்ணெயை மானியம் கொடுத்து வாங்கி, ரேஷனில் வினியோகித்தால், மக்களின் உடல் நலனும் பாதுகாக்கப்படும்; தென்னை விவசாயிகளும் நன்மை பெறுவர், என, தென்னை விவசாயிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'காங்கேயம் மார்க்கெட்டில், ஒரு கிலோ கொப்பரைக்கு 90 - 92 ரூபாய் விலை கிடைக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு, தேங்காய் டன்னுக்கு, 27,500 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
'மத்திய அரசு ஆதார விலையாக கொப்பரை கிலோவுக்கு, 105.90 ரூபாய் நிர்ணயித்துள்ளது. வெளிமார்க்கெட்டில், கொப்பரை விலை சரிந்து வரும் நிலையில், உடனடியாக கொள்முதல் துவங்க வேண்டும். மாநில அரசும் பங்களிப்பு கொடுத்து, கிலோ, 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,' என்றனர்.
மாநில அரசுக்கு அழுத்தம்!
தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம் கூறுகையில், ''தென்னை விவசாயத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவும் நிலையில், தேங்காய், கொப்பரைக்கு கிடைக்கும் விலையே, விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும்.தற்போது, வெளிமார்க்கெட்டில், கொப்பரை விலை சரிவில் சென்று கொண்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள, ஆதார விலையுடன், மாநில அரசும் பங்களிப்பு தொகையை சேர்த்து, தமிழகத்தில் உடனடியாக கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும், என, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
மேலும் படிக்க
ஆட்கள் பற்றாக்குறை: விவசாய வேலையில் ட்ரோன்!
மாட்டுச் சாண எரிவாயுவில் 32 ஆண்டுகளாக சமைக்கும் விவசாய குடும்பம்!
Share your comments