தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு கத்திரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் அதிகமாக காணப்பட்டது.
கோடை வெயில் (Summer)
ஓரளவுக்கு மழை பெய்தாலும் மார்ச் 15ம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வெளுத்தி வரும் நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. ஆனாலும் நேற்று 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாகத் திருத்தணியில் 108.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
அடுத்தபடியாக வேலூர் 106.8, திருச்சி 104.7, மதுரை விமான நிலையம் 104, கரூர் பரமத்தி 103.6, கடலூர் 103.2, நாமக்கல் 103.1, சேலம் 102.7, பரங்கிப்பேட்டை 102.2, சென்னை மீனம்பாக்கம் 101.6, புதுச்சேரி 101.3, மதுரை 101.1, பாளையங்கோட்டை 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.
மேலும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Share your comments