1. செய்திகள்

தமிழகத்தில் நெல் கொள்முதலில் தொடரும் முறைகேடுகள்- விவசாயிகள் குற்றச்சாட்டு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Paddy

"தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்" என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை மண்டல தலைவர் சைதை சிவா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: "தமிழகத்தில் வேளாண் தொழிலை ஊக்கப்படுத்த இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், பாரம்பரிய விவசாய முறைகள் குறித்து தொழில்நுட்பங்களை அறிந்து கொள்கிற வகையில் வருகிற ஜூன் 3, 4, 5 தேதிகளில் சென்னையில் கருத்தரங்கம், மாநாடு, உணவுத் திருவிழா, வேளாண் இயந்திர கண்காட்சி நடத்தவுள்ளோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

தமிழகத்தில் நெல் கொள்முதல் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் துயரத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிப்படையாக சொல்ல முடியாத வகையில் முறைகேடுகள், அரசியல் தலையீடுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கோடை குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. அடிப்படைக் காரணம் கோடை குறுவை குறித்து விஷம பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டது. கொள்முதலை தமிழக அரசு கைவிடப்போவதாக விவசாயிகள் மிரட்டப்பட்டனர். இதனால் அஞ்சி அஞ்சி விவசாயிகள் சாகுபடியை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அரசாங்கம் வரும் நிதியாண்டில் அக்டோபர் துவங்கி 2023 செப்டம்பர் வரையிலும் 8.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய உள்ளதாக இலக்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த காலங்களில் அதிக கொள்முதல் செய்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என தெரிய வருகிறது. உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடிக்கும் நிலையில், கொள்முதலில் பின்தங்கி இருப்பது மிகுந்த சந்தேகம் அளிக்கிறது. எனவே, தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.

தச்சூர் - சித்தூர் சாலையை மாற்றி கொசஸ்தலை - ஆரணி ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறைவேற்ற முன்வர வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் சென்னை-சேலம் எட்டு வழி சாலையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, விவசாயிகள் கருத்தறிந்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது திமுக கொள்கைக்கு முரணாக உள்ளது. இது குறித்து தனது கொள்கையை தமிழக முதல்வர் தெளிவுபடுத்துவதோடு திட்டத்தை கைவிடவேண்டும்.

முல்லைப் பெரியாறு உரிமைக்காக ஏப்ரல் 30-ம் தேதி கேரளம் செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட அறிவிப்பு செய்திருந்தோம். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்காலத் தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதலில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து வரும் 22-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் நாகை ஸ்ரீதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் தஞ்சை பழனியப்பன், மதுரை மண்டல கௌரவத் தலைவர் திருபுவனம் ஆதிமூலம், நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டெல்லி ராம், மாவட்ட செயலாளர் ராஜசேகர், சென்னை மண்டல துணை தலைவர் திருவள்ளூர் வெங்கடாதிரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு,மதுரை மாவட்ட செயலாளர் மேலூர் அருண்,மாநிலத் துணைச் செயலாளர் செந்தில்குமார், கோவிந்த ராஜ், அகஸ்டின் தெய்வமணி, தஞ்சை ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க

மீன் வளர்ப்பிற்கான முக்கிய விஷயங்கள், இதோ!

English Summary: Continuing irregularities in paddy procurement in Tamil Nadu - Farmers accused Published on: 15 April 2022, 07:37 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.