காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாக்கி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தேனி, திண்டுக்கல் ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதுரை, மேலூர் சுற்று வட்டாரங்களில் மாலை 1 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டியது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடுகப்பட்டி, தேவதானபட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் பல்வேறு இடங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச மழை பொழிவாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திவள்ளூர் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
k.Sakthipriya
Krishi Jagran
Share your comments