தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பின், கொரோனா தாக்கம் படிபடியாக குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு என 19 மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 867 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அது நேற்று மேலும் அதிகரித்து ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கொரோனா நோய்த் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நோய் ஏற்பட காரணமாக இருக்கும் நபர்கள் மூன்றுக்கு மேல் இருந்தால், , நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு தெருவில் அல்லது குடியிருப்புகளில் மூன்று நபர்களுக்கு மேல் நோய் தொற்று இருந்தால், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்கே உள்ளவர்களுக்கும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரித்தல், கிருமிநாசினி தெளித்தல், தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
உருமாறிய கொரோனாவால் 400 பேர் பாதிப்பு
இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Share your comments