கொரோனா இரண்டாவது அலை நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களை நோக்கி மெல்ல நகரத் துவங்கியுள்ளது. கிராமங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க, இலவச, 'ஆன்லைன்' மருத்துவ ஆலோசனை, பஞ்சாயத்து அமைப்புகளில் சுய ஊரடங்கு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன.
கிராமங்களில் கொரோனா
நாட்டில் நேற்று ஒரே நாளில் 3.62 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது. 4,120 பேர் உயிரிழந்தனர். இதுவரை நம் நாட்டில், 2.37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா (Corona) தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நகர்ப்புறங்களில் மட்டுமே அதிவிரைவாக பரவி வந்த கொரோனா தொற்று, தற்போது கிராமங்களை நோக்கி நகரத்துவங்கி உள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கிராமப்புறங்களில் தொற்று தீவிரமடைய துவங்கியுள்ளது. எனவே, கிராமங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையில் இறங்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குஜராத் மாநில கிராமங்களில் தொற்று பரவலுக்கு ஏற்றாற் போல சுய ஊரடங்கு (Self Lockdown) அறிவிப்புகளை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் பின்பற்றுகின்றன.
மருத்துவ ஆலோசனை
அசாமில் வெளிமாநிலங்களில் இருந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களின் விபரங்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனிமை முகாம்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் உடல்நலக்குறைவு ஏற்படும் கிராம மக்களுக்கு இலவச 'ஆன்லைன்' மருத்துவ ஆலோசனை வழங்கும் 'இ - சஞ்சீவனி' திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கேரளாவில் 'குடும்பஸ்ரீ' என்ற திட்டத்தை சமூக மேம்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் ஆம்புலன்ஸ் (Ambulance) வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், அவசர மருத்துவ தேவைகளுக்காக, கார் மற்றும் ஆட்டோக்களும், போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. ஹரியானாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காணிப்பு கமிட்டிகள், வெளி மாநில தொழிலாளர்களுக்கான தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர கிராமங்களில் முக கவசம் (Mask) அணியாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டுக்கு வீடு மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என, கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அங்கு, மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. 'ஒரு மாநில அரசு நடைமுறைபடுத்தும் தடுப்பு நடவடிக்கைகள், நல்ல பலனை அளித்தால், பிற மாநிலங்களும் அதைப் பின்பற்றி, கிராமப்புறங்களில் தொற்று பரவலை தடுக்க வேண்டும்' என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குறைகிறது தொற்று!
மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறியதாவது:நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம், கடந்த ஒரு வாரத்தில் 21.95ல் இருந்து, 21.02 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. 10 மாநிலங்களின் தொற்று உறுதி விகிதம், 25 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.கடந்த 3ம் தேதி முதல், குணமடைவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 187 மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொற்று பரவல் குறைந்துள்ளது.
டிசம்பருக்குள் 216 கோடி 'டோஸ்'
நிடி ஆயோக் உறுப்பினர், டாக்டர் வி.கே.பால், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் - டிசம்பர் மாதத்தில் 216 கோடி 'டோஸ்' (Dose) தடுப்பூசிகள் நம்மிடையே இருக்கும். நாட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்ட பின்னும், நம்மிடையே கூடுதல் டோஸ்கள் இருக்கும். ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி, அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
மேலும் படிக்க
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!
ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க 30% மூலதன மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments