தமிழகத்தில், 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தான் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறுவதால், அனைத்து வகையான கொரோனாவையும் காண்காணித்து வருகிறோம் என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் தினமும் 1.60 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 4,200 என்ற அளவில் தான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகளை தொடர வேண்டுமானால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளி (Social Distance), கை கழுவுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை, கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல் கண்காணிப்பு பணியை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக பிரித்து, தொடர்ந்து மேற்கொள்கிறோம். சில இயக்கங்கள் அரசு கொரோனா இறப்பை மறைப்பதாக சொல்கின்றன; அப்படி எதுவும் இல்லை. அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் (Death Certificate), இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை.
தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில், இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தில் திருத்தி கொள்ளலாம். வரும் மாதங்களில், பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 சதவீத பாதிப்பு தான் உள்ளது. தஞ்சாவூரில் பொது மக்கள் முக கவசம் அணியாததால், தொற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை ஒழிக்க, மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேபோல், கொரோனா தொற்றையும் ஒழிக்க வேண்டும்.
'டெல்டா பிளஸ்' தொற்று
தமிழகத்தில் 10 பேருக்கு மட்டுமே, 'டெல்டா பிளஸ் (Delta Plus)' தொற்று இருப்பது தெரிய வந்தது. 1,400க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னையில் 90 சதவீதமும், தமிழகம் முழுதும் 72 சதவீதமும், 'டெல்டா' வகை கொரோனா தான் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், டெல்டா வகை கொரோனா, ஏப்ரல், மே மாதங்களில் வந்து விட்டது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறும். அதனால், டெல்டா பிளசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காமல், அனைத்து வகையான உருமாற்றம் அடையும் கொரோனாவும் கண்காணிக்கப்படுகிறது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் இல்லாமல் மாதந்தோறும் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கிறோம். தற்போதைய சூழலில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 3 சதவீதம் அளவில் உள்ளது. ஒருசில மாவட்டங்களில் மட்டும், 5 சதவீதமாக உள்ளது என ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments