Vaccine for children
நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட 10 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Vaccine) செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி (Vaccine for children)
தற்போது, ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 15-18 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் (Cowin App) மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 6.35 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க
இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!
Share your comments