உலகளவில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என்று பரவி வந்த நிலையில் தொற்று கட்டுக்குள் வந்தது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ், தற்பொது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தினசரி கொரோனா பாதிப்பு 2000-ஐக் கடந்த நிலையில், தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக உயர்ந்து 4000-ஐக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு (Corona Affect)
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 4,041 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 2,745 நபர்களுக்கும், நேற்று 3,712 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆனது. இதன் மூலமாக இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது, 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,24,651 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 2,363 நபர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 4,26,22,757 ஆக அதிகரித்துள்ளது. இப்போது வரை இந்தியாவில் 21,177 நபர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனா வைரஸை அழிக்கும் பேராயுதமாக கருதப்படும் தடுப்பூசி, இந்தியாவில் இதுவரை 193.83 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
சிலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது, மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது. அதோடு, முகக் கவசம் அணிந்தும், தனிமனித விலகலை கடைபிடிப்பதும் கொரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
மேலும் படிக்க
ஒமைக்ரானால் பாதித்த நபர்களுக்கு அதிகரித்தது நோய் எதிர்ப்பு சக்தி!
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த விதைகளை சாப்பிடுங்கள்!
Share your comments