உணவுகளுக்கும், உணவகங்களுக்கும் பெயர் போன மதுரையில் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக இயங்கி வரக்கூடிய உணவகங்கள் மற்றும் கடைகள் பல உள்ளன.
அவ்வாறு பல ஆண்டு பாரம்பரியத்துடன் மதுரையில் இயங்கி வரும் கடை தான் "திருமலை மடைகருப்பசாமி " பருத்தி பால் கடை.
இந்த கடையானது மதுரையில் 1930ல் கருப்பையா கோனார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 92 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.
பொதுவாகவே இன்றைய காலங்களில் உணவுகளில் வெரைட்டி பார்பவர்கள் ஏராளம், அப்படிப்பட்ட சூழலில் மதுரையில் 92 ஆண்டுகள் பழமையான பருத்தி பால் கடை ஒரு ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது..
பருத்தி பால் என்ற உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய ஒரு பானத்தை மட்டுமே வைத்து வியாபாரம் செய்தால் அது வெற்றி அடையாது என்பது பலரது கருத்து. ஆனால் அது உண்மையல்ல என்பதை நிரூபித்து தரத்திலும், ஆரோக்கியத்திலும் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் இருந்தால் இன்றைய காலத்திலும் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக இருந்து இந்த கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக நடத்தி வருகிறார் திரு. கோவிந்தராஜ் அவர்கள்.
இந்த கடையில் காலை நேரங்களில் கம்மங்கூழ், கேப்பைகூழ் மற்றும் பருத்தி பால் ₹20க்கு விற்கப்படுகிறது. மாலை நேரங்களில் பருத்தி பால் மட்டுமே விற்கப்படுகிறது.
மாலை நேரங்களில் இந்த கடையில் நிற்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு இங்கு மக்கள் வருகை அதிகமாக உள்ளது,உணவகங்கள் மற்றும் பிற உணவு கடைகள் அனைத்தும் அவ்வளவு எளிதாக தனது உணவின் மூலம் மதுரை மக்களிடம் நற்பெயர் வாங்க முடியாது.. ஆனால் அந்த மதுரை வாசிகளே இந்த கடைக்கு தினமும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள் என்றால் இங்கு கிடைக்ககூடிய பருத்தி பாலின் தரத்தையும், சுவையையும் நாம் அதன் மூலமே அறியலாம்
மேலும் படிக்க
Share your comments