1. செய்திகள்

திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை

KJ Staff
KJ Staff

 தமிழகத்தில் அதிக அளவில் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் நிலவும் தட்ப வெப்ப நிலை, மண் மற்றும் நீரின் தன்மையால் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இங்கு ஆண்டுக்கு 3 முறை திராட்சை அறுவடை நடைபெறுகிறது. விவசாயிகள் சுழற்சி முறையில் அறுவடை பருவத்தை நிர்ணயித்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் திராட்சை திருச்சி, சென்னை, பெங்களூரு, கேரளம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வரும் விவசாயிகள், திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணப்பயிர் சாகுபடியான திராட்சை விவசாயத்திற்கு அரசு சார்பில் போதிய மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதில்லை. சொட்டு நீர் பாசன திட்டத்தை தவிர வேறு எந்தத் திட்டத்திலும் திராட்சை சாகுபடிக்கு அரசு சார்பில் மானியம் வழங்குவதில்லை. திராட்சை உற்பத்தியில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய செலவினமாக உள்ளது. ஆனால், திராட்சை பயிருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு மானிய விலையில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலை கொடுத்து உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. 

தற்போது, அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் திராட்சை சாகுபடி சேர்க்கப்படவில்லை. இதனால் இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றம், நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும் என்ற குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லை. எனவே திராட்சை விவசாயத்தை பாதுகாப்பதற்கு திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Crop Insurance request for Grapes Published on: 03 October 2018, 02:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.