Heavy Rain - Mandous cyclone
கடந்த 5-ந் தேதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் முதல் புயல் இது ஆகும். நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 செ.மீ. என்ற அளவில் கனமழை பதிவாகியிருந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் நேற்று 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
மாண்டஸ் புயல் (Mandous cyclone)
நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.
மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும். சென்னையில் இருந்து தற்போது 30 கி.மீட்டர் தெற்கு-தென் கிழக்கே மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் பின்பகுதி இன்னும் 1 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும்" என்று அவர் தெரிவித்தார். புயல் கரையை கடந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க
Share your comments