இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ Indian Farmers Fertiliser Cooperative -IFFCO)அத்தியாவசிய உரங்களின் விலையை அதிகரித்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலை 58.33 சதவீதமும் , காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கின்றது.
வைகோ கண்டனம்
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ.1200க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.700 விலை உயர்ந்து ரூ 1900 ஆகி விட்டது.
ரூ.1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ.615 உயர்ந்து ரூ.1775க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950 ல் இருந்து ரூ.400 உயர்ந்து, தற்போது ரூ. 1350 ஆக விற்கப்படுகின்றது.
பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில், முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.
விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.ஆர்.பாண்டியன் கருத்து
இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.1,400-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் தற்போது, மூட்டைக்கு ரூ.500 உயர்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விலை உயர்வை கைவிட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும் கூட்டுறவு வேளாண் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அடகு வைத்துள்ள நகைகளை விவசாயிகளிடம் வழங்க கூட்டுறவுத்துறை மறுத்து வருகிறது. எனவே, சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகளை உடனடியாக திருப்பி அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க....
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!
கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை முறைகள்! - வேளாண் துறை ஆலோசனை!!
Share your comments