2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் காலத்தை நீட்டித்த ரிசர்வ் வங்கியின் காலக்கெடு இன்றுடன் முடிய உள்ளது. தற்போது வரை மேலும் காலக்கெடு நீடிப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் இன்று மாலைக்குள் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துக்கொள்ளலாம் எனவும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த செப்- 30 தேதி RBI சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மேல், RBI வெளியிடும் 19 அலுவலகங்களில் மட்டும் ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், ரூ.2000 நோட்டு முன்பு போலவே செல்லுபடியாகும் என சுற்றறிக்கையில் தெரிவித்திருந்த ரிசர்வ் வங்கி, குறிப்பிட்ட தேதி வரை பொதுமக்கள் இதனை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெளிவுப்படுத்தியது. அறிக்கை வெளியிடப்பட்ட தேதி வரை புழக்கத்திலிருந்த 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ள நோட்டுகளையும் திரும்ப பெறும் வகையில் அக்டோபர் 7 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் இன்றுடன் அந்த காலக்கெடுவும் முடிவுக்கு வருகிறது.
காலக்கெடு முடிந்தால் என்ன நடக்கும்?
கடந்த மே மாதம், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக முடிவெடுத்த ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30, 2023 அன்று பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதியாக முன்னர் நிர்ணயித்தது. அதன்பின் கடைசி தேதியினை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டித்தது.
அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் ஒருவரிடம் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதை அவரால் வங்கியில் டெபாசிட் செய்ய இயலாது. ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் இருந்து மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016-இல் பயன்பாட்டுக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக புதிய முறையில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன.
பொதுமக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், 2018-19 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
96 சதவீதம் அச்சடிக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக செப்-30 தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வழங்கப்பட்டுள்ள காலக்கெடு மூலம் மேலும் மீதமிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. தங்களிடம் இன்னும் ஏதேனும் 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பின் இன்று மாலைக்குள் டெபாசிட் செய்வது நல்லது என்பதை நினைவில் கொள்க.
இதையும் காண்க:
சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியம்- மாநிலம் வாரியாக விலைப்பட்டியல் இதோ
மஞ்சள் வீரன் TTF வாசனுக்கு வந்த சோதனை- அடுத்த 10 வருஷம் நோ பைக்
Share your comments