நீடித்த நிலையான பயிர் மகசூலுக்கு மண் வளத்தினை பேணி பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம் என வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மண் பரிசோதனை அவசியம்
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கி.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேளாண் தீவிர சாகுபடி முறை, வீரிய மற்றும் ஒட்டு ரகங்களின் பயன்பாடு ஆகியவற்றால் மண்ணில் இருந்து அதிகளவு சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. நீடித்த நிலையான பயிர் மகசூலுக்கு மண் வளத்தினை பேணி பாதுகாப்பு என்பது அவசியமானதாகும். இந்த வகை மண் வளத்தில் பாதுகாத்திட மண் மேலாண் உத்திகளை கையாள மண் பரிசோதனை மிகவும் முக்கியமான ஒன்றாகும். மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களின் அளவை தெரிந்துக் கொள்ளலாம்.
மண்ணில் உள்ள பிரச்சினைகளான கலர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ள லாம். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து, அந்த சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தினை பெருக்கிடலாம்.
ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக்கூடாது
எனவே, ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக்கூடாது. மண்ணின் நிறம் மற்றும் வகை வெவ்வேறாக தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும். மேட்டுபாங்கான மற்றும் தாழ்வான பகுதியில் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.
வரப்பு, வாய்க்கால் அருகிலும், மரத்தடி நிழல் பகுதிகளும், கிணற்றுக்கு அருகாமையிலும், மக்கிய குப்பை உரங்கள் பூஞ்சாண் மற்றும் பூச்சிமருந்து இடப்பட்ட பகுதிகளிலும் இருந்து மண் மாதிரி எடுக்கக்கூடாது.
மண் மாதிரி எடுக்கும் முறை
நெல், கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு மேலிருந்து 15 செ.மீ., ஆழத்திலும் பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி பயிர்களுக்கு மேலிருந்து 22 செ.மீ., ஆழத்திலும், தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு 30 முதல் 60 அல்லது 90 செ.மீ., ஆழத்திலிருந்து மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட மண்ணை அரை கிலோ அளவு சேகரித்து பின் சுத்தமான ஒரு துணிப்பையில் போட்டு அதன் மீது மண் மாதிரி பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டி ருந்த சாக்குகள் மற்றும் பைகளை மண்மாதிரிகள் அனுப்ப பயன் படுத்தக்கூடாது.
விவசாயிகள் நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மூலம் நிலத்தின் மண் மாதிரிகளை ஒருமண் மாதிரிக்கு 20 ரூபாய் ஆய்வுக் கட்டணமாக செலுத்தி மண்வள அட்டையினை பெற்று அதன் பரிந் துரையின்படி பயிர்களின் தேவைக் கேற்ப உரமிட்டு உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மண் மாதிரியில் தவிர்க்க வேண்டியவை
இதேபோல், திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடைக்கு பின், உழவுக்கு முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் போது வயலின் வரப்பு ஓரங்கள் வாய்க்கால் ஓரம், மரநிழல், ஈரமான பகுதிகள் மற்றும் உரம் குவித்த இடங்கள் ஆகியவற்றை தவிா்க்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் வி வடிவ குழிகள் அரை அடி வடிவ குழிகள் அரை அடி முதல் முக்கால் அடி ஆழத்துக்கு எடுக்க வேண்டும். அந்த குழிகளில் பக்க வாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்திற்கு மேலிருந்து கீழாக சுரண்ட வேண்டும். இவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலா்த்தி கல், வோ் முதலான பொருள்களை தவிா்த்து பின் அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ அளவுக்கு மண்ணை சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை துணிப்பையில் இட்டு அதில் விவசாயியின் பெயா், முகவரி, புல எண், பாசன விவரம், பயிா் சாகுபடி விவரம் ஆகியவற்றுடன் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் வழங்க வேண்டும்.
சந்தேகங்களுக்கு அணுகலாம்
மண் பரிசோதனை செய்வதால் பயிரின் தேவையறிந்து உரமிட்டு உரச் செலவை குறைக்கலாம். மண்ணில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருந்தால் அதை கண்டறிந்து நிவா்த்தி செய்யலாம். மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண் பரிசோதனை தொடா்பான சந்தேகங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம்
எனவே, விவசாயிகள் தங்கள் மண்ணின் வளம் அறிந்து உரமிட்டு மகசூலை அதிகரிக்க மண்பரிசோதனை செய்ய முன் வர வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?
Share your comments