இந்தியாவில் 'டிஜிட்டல் கரன்சி'யை அறிமுகம் செய்வதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், இளைஞர்களின் எதிர்பார்ப்பு விரைவில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
இன்றைய வாழ்க்கையில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவருகிறது. இதைத்தான் இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதாவது வெளியே செல்லும்போது, கையில் பணத்தை எடுத்தச் செல்லத் தேவையில்லை என்ற நிலையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
இதற்கு வழிவகை செய்யும் விதமாக, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022 - 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, சி.பி.டி.சி., எனும் 'சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி' விரைவில் அறிமுகம் செய்யப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கிரிப்டோ கரன்சிகள்
டிஜிட்டல் கரன்சிகள், அரசின் அங்கீகாரம் பெற்றதாகும். ஆனால், கிரிப்டோ கரன்சிகள் போன்றவை அரசின் உத்தரவாதம் அல்லது அங்கீகாரம் இல்லாதது ஆகும்.இந்நிலையில், டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய பணிகள் நடைபெற்று வருவதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிதொழில்நுட்ப பிரிவின் நிர்வாக இயக்குனரான அஜய் குமார் சவுத்ரி இது குறித்து கூறியுள்ளதாவது:டிஜிட்டல் கரன்சி, மொத்த விலை மற்றும் சில்லரை பிரிவுகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பணப்பரிவர்த்தனை
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், பணம் மொபைல் போனிலேயே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.யு.பி.ஐ., வாயிலான பணப்பரிவர்த்தனைகளில், நாம் ஏற்கனவே சாதனை படைத்திருக்கும் நிலையில், விரைவில் டிஜிட்டல் கரன்சியும் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
பெண்களுக்கு சூப்பர் வசதி- ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments