மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் உள்ளூர் வாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் பேரிடர் நண்பர்கள் திட்டம் 350 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.
நடவடிக்கை
என்.டி.எம்.ஏ., எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் 17வது நிறுவன நாளையொட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் நம் நாடு மிகச் சிறப்பாக செயல் பட்டுள்ளது. பல உலக நாடுகள் கடுமையாக போராடிய நிலையில், மிகப் பெரிய மக்கள் தொகையை உடைய நம் நாடு சிறப்பாக கையாண்டது.
வைரஸ் பரவல்
தடுப்பில் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்தின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. கடந்த 1999ல் ஒடிசாவில் தாக்கிய புயலின்போது 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தாண்டில் புயலால் 50 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்த பலியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் சரியான நேரத்தில் கிடைத்தால் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
சோதனை முறை
பேரிடர் காலத்தின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்ளூர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேரிடர் நண்பர்கள் திட்டத்தை 25 மாநிலங்களில், 30 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தினோம். இதற்கு உள்ளூர் வாசிகளிடம் இருந்து நல்ல வரவேற்புப கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுதும் 350 மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். பேரிடர் ஏற்பட்டால் மற்றவர்களை மீட்பதற்கு உடனடியாக ஈடுபடுவது குறித்து இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அவர் பேசினார்.
மேலும் படிக்க
பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும்: உலக சுகாதார அமைப்பு தகவல்!
Share your comments