தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசலுக்கான விலைக் குறைப்பை முழுமையாக செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டிப்பதாகக் கூறி, கோவை மாவட்ட பாஜக சார்பில் சிவானந்தா காலனியில் இன்று (ஜூலை 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''எதையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக திமுக மக்கள் முன் வைத்ததோ, அதையெல்லாம் நிறைவேற்றவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை அளிக்காமலேயே, மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல், டீசலுக்கான வரி விகிதத்தை மாற்றி அமைத்து, மக்களுக்கு அந்த பலனை அளித்துள்ளது.
பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களில் எல்லாம் உடனடியாக அவர்களின் தங்கள் பங்குக்கு, வரியை குறைத்து உதவியுள்ளனர். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி முழுமையான விலைகுறைப்பை செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தாலிக்கு தங்கம், பணிக்கு செல்லும் மகளிருக்கு இருசக்கர வாகனம் அளிக்கும் திட்டம் என அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. கோவையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அவற்றை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்றார்.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, கோவை பாஜக தெற்கு மாவட்டத்தின் சார்பாக மலுமிச்சம்பட்டி சந்திப்பில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
Share your comments