தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி முகத்தில் உள்ள திமுக, தனி பெரும்பான்மை உடன் 10 ஆண்டுக்கு பின் ஆட்சியமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க உள்ளார். தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா (Jayalalitha), கருணாநிதி (Karunanidhi) எனும் இருபெரும் ஆளுமைகள் மறைவிற்கு பின் நடந்த முதல் சட்டசபை தேர்தல் என்பதால், வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருந்தது.
திமுக முன்னிலை
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த தேர்தலில், திமுக ஆட்சியை பிடிக்குமென பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். தற்போது வரை திமுக (DMK)120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் 18 இடங்களிலும், மதிமுக 4, விசிக 4, கம்யூ கட்சிகள் தலா 2 இடங்களிலும் என மொத்தம் 150 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளன.
இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. அநேகமாக வரும் 6ம் தேதி பதவியேற்பு விழா இருக்குமென அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுகவின் வெற்றியால், உற்சாகமடைந்த தொண்டர்கள், தேர்தல் கமிஷனின் வேண்டுகோளை கண்டு கொள்ளாமல், ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டியும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், சமூகவலைதளமான டுவிட்டரில் 'மு.க.ஸ்டாலின் என்னும் நான்' என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
அதிகாரிகள் வருகை
சி.எம்.டி.ஏ துணை தலைவர் கார்த்திகேயன், ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜூவால், ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரமோகன், அப்பல்லோ குழுமம் ப்ரீத்தா ரெட்டி, மீன்வளத்துறை செயலாளர் கோபால், மற்றும் சில முக்கிய அதிகாரிகள் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தனர்.
ஸ்டாலின் நன்றி
திமுகவை வெற்றி பெற வைத்த மக்கள், தொண்டர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நண்பகல் முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்!
Share your comments