விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம், நத்தமேடு, அத்தியூர், மரகதபுரம், ஏமப்பூர், திருப்பச்சாவடிமேடு, நாயனூர், அரசங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு அதிகமாக விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
கடந்த முறையை போலவே இந்த ஆண்டும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பன்னீர் கரும்பை பயிரிட்டனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கரும்பு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்க தமிழக ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு, நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. அப்படி வழங்கப்படும் தொகுப்பில் கரும்பும் இடம்பெறுகிறது.
இதற்கான கரும்புகளை கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீட்டால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஒரு கரும்புக்கு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய், ஆனால், இப்போது 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே ஒரு கரும்புக்கு விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஆறடி வளர்ந்துள்ள கரும்பை மட்டும் அரசு கொள்முதல் செய்வதால் மற்ற கரும்புகளை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும், பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே விற்கப்படும் கரும்பை அரசாங்கம் வெவ்வேறு உயரங்களில் இருந்தாலும் மொத்தமாக அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் தொகுப்பிற்கு தமிழக அரசாங்கம் கரும்புகளை கொள்முதல் செய்கிறது மகிழ்ச்சி என்றாலும் இதுபோன்ற நிபந்தனைகள் எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் படிக்க:
Share your comments