விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக வாழப்பாடி பகுதியில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விளைவித்த வெண்டைக்காயை அறுவடை செய்ய விவசாயிகள் தவிர்ப்பதால் தோட்டத்திலேயே அழுகி வருகிறது.
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு
வாழப்பாடி பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், கொள்முதல் செய்வதற்கு வெளி மாவட்ட வியாபாரிகளின் வரத்து குறைந்து போன காரணத்தினாலும், கடந்த சில தினங்களாக வாழப்பாடி, தலைவாசல் தினசரி சந்தைகள் மற்றும் சேலம், ஆத்துார் உழவர் சந்தைகளில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, வாழப்பாடி தினசரி காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு வெண்டைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.4க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட வெண்டைக்காயை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்ல, ஆகும் விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் பெரும்பாலானோர், விளைவித்த வெண்டைக்காய்களை அறுவடை செய்வதையே தவிர்த்துள்ளனர். இதனால், வெண்டைக்காய் தோட்டத்திலேயே முதிர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவனமாக மாறிய வெண்டைக்காய்
இதேபோல், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் வெண்டைக்காய் ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைவித்த வெண்டைக்காயை விற்பனை செய்யயமால் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விளைச்சல் அதிகரிப்பு காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் மாயம் – ஐ.நா. தகவல்!
Share your comments