திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை மாடு முட்டியதில் அதனுடைய உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தனர். இதில் 400 மாடுகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் அவரது காளையை வாடிவாசல் அருகே அழைத்து வரும்போது திடீரென காளை பாய்ந்தது, அதில் அவர் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீனாட்சி சுந்தரத்திற்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே சிறிய பொம்மை கடை வைத்துள்ளார்.
இதே போன்று மதுரை அருகே உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முழுமையாக 3 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு நிற சீருடை அணிந்து வந்து களமிறங்கி வருகிறார்கள். ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் உள்ளன.
மேலும் மதுரை எஸ்.பி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். கோவிட் பாதிப்பின் காரணமாக பார்வையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெரும் சிறந்த காளைக்கு கன்றுடன் பசுவும், சிறந்த வீரருக்கு காரும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடிகாரம், வெள்ளிக்காசு, தங்கக்காசு, பீரோ, பைக் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்களும் வெற்றி பெறும் வீரர்களுக்கு மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 20 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுனர்.
மேலும் படிக்க
வாக்காளர் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்புகிறீர்களா?இதோ செயல்முறை
Share your comments