இந்திய பசுக்களின் குடலில் ”பாக்டீரியாவின் தொழிற்சாலையை" கடவுள் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார் என குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளிடம் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் செவ்வாய்கிழமை அன்று உரையாற்றினார். அப்போது இந்திய பசுக்களின் மாட்டு சாணம் மற்றும் கோமியம் விவசாயிகளுக்கு ஒரு வரம் என குறிப்பிட்டார். 'இயற்கை விவசாயத்தின் அம்சங்கள்' என்ற தலைப்பில் ஆளுநர் ஆச்சார்யா உரையாற்றிய விவரங்கள் பின்வருமாறு-
"கழுதை, குரங்கு, இந்திய மாடு போன்ற பல்வேறு விலங்குகளின் சாணத்தை சேகரித்தேன். அதையே ஆய்வுக்கு அனுப்பிய போது, மாடுகளின் ஒரே ஒரு கிராம் சாணத்தில் மட்டும் 300 கோடி பாக்டீரியாக்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த உலகில் பல விலங்குகள் உள்ளன, ஆனால் இந்திய பசுக்களின் குடலில் ”பாக்டீரியாவின் தொழிற்சாலையை" கடவுள் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார். இது விவசாயிகளுக்கு கிடைத்த ஒரு வரம்" என்றார்.
யூரியா, பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற பொதுவான விவசாய நடைமுறைகளை விமர்சித்தார். ”ஒரு பசு ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிலோ முதல் 10 கிலோ வரை சாணத்தையும், அதே அளவு (லிட்டரில்) சிறுநீரையும் உற்பத்தி செய்கிறது. ஒரு நாள் முழுவதும் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை சேகரித்து, ஏற்கனவே 180 லிட்டர் தண்ணீர் உள்ள ஒரு டிரம்மில் வைக்கவும். பின்னர் இந்த கலவையில் சிறிது வெல்லம் மற்றும் ஏதேனும் பருப்பு மாவு சேர்க்கவும். கடைசியாக, ஒரு பெரிய மரத்தின் அடியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைச் சேர்க்கவும். பின்னர் அதை சரியாக கலந்து குறைந்தது ஐந்து நாட்களுக்கு சேமிக்கவும். ஆறாவது நாளில், உங்கள் உரம் தயாராக உள்ளது, இது ஒரு ஏக்கர் நிலத்திற்கு தாரளமாக பயன்படுத்தலாம்” என்றார்.
”இந்த பார்முலாவை பின்பற்றினால், ஒரு மாதத்திற்குள் 30 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதுமான உரம் உற்பத்தி செய்ய ஒரு மாடு பயன்படுத்தப்படும். மேலும், இந்த உரமானது பண்ணைகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும்” என ஆளுநர் தேவ்ரத் கருத்து தெரிவித்தார்.
இரசாயன விவசாயத்தால், நிலங்களின் ஒட்டுமொத்த வளம் குறைந்து, விளைநிலங்கள் தரிசாக மாறிவிட்டன என்றார். விவசாயிகளின் சிறந்த நண்பர்களான மண்புழுக்களை இரசாயனங்கள் கொன்றுவிட்டதே இதற்குக் காரணம் என்றார்.
நான் எனது நிலத்தில் இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருகின்றேன். இரசாயன விவசாயத்திற்கு இணையான உற்பத்தியை என்னால் வழங்க முடியும். வெளிநாடுகளிலிருந்து எனது பண்ணையினை காண வருகை தருகிறார்கள். எனது நிலத்தில் விளையும் கரும்பு உயரம் 18 அடிக்கு மேல் உள்ளது. இது இராசயன விவசாய விளைச்சலை விட சிறந்தது எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக, இயற்கை விவசாயத்தை பயன்படுத்தினால், மாடுகள் தெருக்களில் அலைய வேண்டியதில்லை, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் பலியாக மாட்டார்கள். மேலும், விவசாயத்திற்கு தேவையான யூரியா மற்றும் பிற உரங்களை இறக்குமதி செய்ய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை என தனது உரையினை நிறைவு செய்தார்.
மேலும் படிக்க:
பறவைக்காய்ச்சல் எதிரொலி- கோழி மற்றும் வாத்து இறைச்சிக்கு தடை
கோதுமை உற்பத்திக்கு வேட்டு வைக்கும் வெப்பநிலை-விவசாயிகளுக்கு எச்சரிக்கை
Share your comments