மக்காச்சோளப் பயிரில் 'போல் ஆர்மி வார்ம்' என்ற புதியவகை அமெரிக்கன் படைப்புழு பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பவானிசாகர், கரூர், வாகரை, கள்ளக் குறிச்சி, மதுரை சேடபட்டி, திருச்சி- உப்பிலியபுரம் ஆகிய பகுதியில் இப்படைப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது.
அமெரிக்க துணை கண்டத்தின் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதியை பிறப்பிடமாக கொண்டது இந்த புதிய வகை படைப்புழு. இப்படைப்புழு முதன் முதலாக, அதன் தாயகத்தை கடந்து நைஜீரியாவில் கடந்த 2016ல் மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது.
தற்போது 44 ஆப்ரிக்க நாடுகளில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் படைப்புழுவின் தாக்குதல் கடந்த மே 18 ல் கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் இல்லாமல் இருப்பது மற்றும் சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பது இதன் பாதிப்பு அதிகமாக காரணமாக உள்ளது. இப்பூச்சி, மக்காசோளம், நெல், சோளம், சிறுதானிய பயிர்கள், கரும்பு, காய்கறி பயிர்கள், பருத்தி போன்ற 80 வகை பயிர்களை தாக்கும். வளர்ந்த தாய் அந்து பூச்சிகள் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 கி.மீ முதல் 480 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டது.
பாதிப்பின் அறிகுறிகள்
தாய் அந்துப்பூச்சி 100 - 200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதத்தை உண்டுபண்ணும். சேதத்தால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இளம் செடிகளில் இலையுறைகளையும் முதிர்ந்த செடியில் கதிரின் நுாலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரத்தில் அதிகமான சேதத்தை விளைவிக்கும். புழுக்கள் இலையுறையினுள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இலைகள் விரிவடையும் போது, அதில் வரிசையாக துளைகள் தென்படும். இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைந்ததால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையினுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் இருக்கும். கதிர் உருவானதற்கு பின் பாதிப்பு தோன்றினாலும், கதிரின் மேலுறையை சேதப்படுத்துவதோடு கதிரையும் சேதப்படுத்தும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
‘அமெரிக்கன் படைப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடித்து கட்டுபடுத்தலாம். மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை கோடை உழவு செய்வதன் மூலம் அழிக்கலாம். ஏக்கருக்கு 8 முதல் 10 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 பறவை குடில்களை அமைத்து பறவைகளை கொண்டு புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஊடுபயிர் செய்யப்பட்ட மக்காசோளத்தை தாய் அந்துப்பூச்சிகள் முட்டை இட தேர்வு செய்வதில்லை. எனவே மக்காசோள பயிருடன் வயலைச் சுற்றி நேப்பியர் புல்லை வரப்பு பயிராக பயிரிடலாம். அவ்வப்பொழுது கண்ணில் தென்படும் முட்டை குவியல்கள், புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்.
Share your comments