மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சென்னை கோட்டையை நோக்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின் செய்தியாகர்களிடன் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவானது என குற்றம்சாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் வாழக்கூடிய 80 சதவீத சிறு, குறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு கண்டனம்
மேலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதில் இருந்து அரசு தன்னை விலக்கிக் கொண்டு, சந்தையில் போட்டிப் போட்டு தானே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்குகிறோம் என்ற பெயரில் ஆன்லைன் கடைகளை அனுமதித்து உலக கார்ப்பரேட் முதலாளிகளிடம் இந்திய விவசாயிகளை அடகு வைக்கிற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இச்சட்டம் மூலம் இரட்டை கொள்முதல் முறையை கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய உணவுக் கழகம் இனி கொள்முதல் செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடு வருகிற 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்முதலுக்கான நிதி முற்றிலும் கைவிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு சட்டங்களில் போதிய திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகிற போது தான் விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். அதைவிட்டு விட்டு விவசாயிகளுக்குப் பலனளிக்கும் சட்டம் என்கிற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்துவது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்பதை மத்திய அரசுக்குக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை
பிரதமர் பிரச்சினையின் நியாயத்தை உணர மறுப்பதும், மறு பரிசீலனை செய்வதற்கும் மறுத்து அதனை திசை திருப்ப முயற்சிக்கிறார். குறிப்பாக, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற மாட்டோம் என்பது எங்கள் அரசின் கொள்கை முடிவு என உச்ச நீதிமன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு தற்போது போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையைத் தான் வேளாண் சட்டமாக கொண்டு வந்திருக்கிறேன் என்று உண்மைக்குப் புறம்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இதனை விவசாயிகள் ஏற்கமாட்டோம் என்றார்.
கோட்டை நோக்கி பிரச்சார பயணம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை கோட்டையை நோக்கி பிரச்சார பயணம் மேற்கொள்ளப் போகிறோம்.
ஸ்வமிதா - ஒரு மோசடி நடவடிக்கை
ஏற்கெனவே கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு அதனை செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நிலையில் தற்போது மத்திய அரசு 'ஸ்வமிதா' என்கிற சொத்து விவரம் குறித்த அறிக்கைக்கான கார்டு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளை திசை திருப்புகிற ஒரு மோசடி நடவடிக்கையாகும். இதனை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்கெனவே அறிவித்த அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த கோரிக்கை
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் வெளிவந்திருக்கிறது. இதனை முறைப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தும் அதேவேளையில் கொள்முதலுக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என பிஆர் பாண்டியன் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க
விதை பெருக்கு திட்டம் : நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75% கொள்முதல் விலை - வேளாண் துறை
வட கிழக்கு பருவ மழை காலங்களில் தக்காளி விலை ரூ. 20 வரை உயர வாய்ப்பு - வேளாண் பல்கலை!!
இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடையாது - நவம்பர்-1லிருந்து விநியோக முறையில் மாற்றம்!!
Share your comments