செஞ்சி மற்றும் மேல்மலையனுார் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். விவசாயம் பொய்த்துப் போகும் நாட்களில் கால்நடைகளே இவர்களுக்கு கை கொடுத்து வருகிறது. கால்நடைகளுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி (Vaccine) போடுவது வழக்கம்.
கோமாரி நோய்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திய தமிழக அரசு கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசிகளை போடவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் மாடுகளை வாங்கி வந்துள்ளனர்.
கோமாரி நோய் பாதிக்கப்பட்ட மாட்டிற்கு அதற்கான அறிகுறி 15 நாட்களுக்கு பிறகே தெரியும். நோய் தாக்குதல் தெரிந்ததும் அதனுடன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும் நோய் தாக்கும் என்ற பயத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்த கால்நடைகளை விற்று வருகின்றனர். அதுபோன்று, தள்ளாகுளம், அவலுார்பேட்டை, செஞ்சி சந்தைகளில் அதிகளவில் கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் செஞ்சி, மேல்மலையனுார் பகுதி கால்நடைகள் மத்தியில் சில நாட்களாக கோமாரி நோய்தாக்குதல் தெரியவந்துள்ளது.செஞ்சி ஒன்றியம் கெங்கவரம், கணக்கன்குப்பம் கிராமங்களில் அதிக அளவில் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.நோய் தாக்குதலுக்கு ஆளான கால்நடை உணவு உண்ணாமல் மிக விரைவில் இறந்து விடுகின்றன. கடந்த 3 நாட்களில் கெங்கவரம் கிராமத்தில் குணசேகரன், கோவிந்தசாமி, சுந்தரம், மண்ணு ஆகியோரின் மாடுகளும், அய்யனார், தங்கதுரை, விமலா ஆகியோரின் கன்று குட்டிகளும் இறந்துள்ளன. மேலும் சில இடங்களில் கால்நடைகள் இறந்து விட்டதாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி, கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழிப்புணர்வு
கால்நடைகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்க பொது மக்கள் சந்தைகளில் புதிதாக கால்நடைகளை வாங்குவதையும், விற்பதையும் நோய் கட்டுக்குள் வரும் வரை தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் 60 சதவீதம் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை பணியாளர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்தி நோயைக் கட்டுப்படுத்தஅதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.
மேலும் படிக்க
தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்க கால்நடைகளுக்கான ஊறுகாய்ப் புல் தயாரிப்பது எப்படி?
Share your comments