விவசாய கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் தேர்தலில் வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்படும் என 10 மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.
விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை கோட்டை வாசலில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கோனப்பன் முன்னிலையில் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கி பேசினார்.
தொடரும் வனவிலங்குகள் தாக்குதல்
அப்போது, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளினால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதை குறிப்பிட்டார்.
கோரிக்கையை ஏற்காத மத்திய-மாநில அரசுகள்
இதனால் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். விவசாயத்தை அழிக்கும் வன விலங்ககளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் வனவிலங்குகள் பிரச்சினையை தீர்க்காத காரணத்தினால் இத்தேர்தலில் விவசாயிகள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நோட்டாவுக்கு வாக்கு
ஆலோசனைக் கூட்டத்தில் வனவிலங்குகள் பிரச்சினையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் வாக்குகளை செலுத்தக்கூடாது என்றும், விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் அனைத்து வாக்குகளும் நோட்டாவுக்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க....
Share your comments