கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை(3 Agri Bills) ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் சனிக்கிழமையுடன் ஏழாவது மாதத்தை எட்டியது. இதைக் குறிக்கும் விதமாகவும், அந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகளை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அவர்களை தடுப்பதற்கு இரு மாநிலங்களின் தலைநகரான சண்டீகரிலும், அந்த நகரைச் சுற்றியும் அதிக அளவில் போலிஸார் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் பேரணி
பஞ்சாப் மாநிலம் மெஹாலி, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இருந்து சண்டீகர் நோக்கி வந்த விவசாயிகளை தடுக்க பல இடங்களில் தடுப்புகள் போடப்பட்டன. எனினும், மொஹாலியில் (Mohali) இருந்து நடந்தும், வாகனங்களிலும், டிராக்டர்களிலும் (Tractors) பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சண்டீகர் எல்லையை சென்றடைந்தனர். அவர்களை கலைந்து போகச் செல்வதற்கு போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். எனினும், அவர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சண்டீகருக்குள் நுழைந்தனர். அவர்கள் பஞ்சாப் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்வதைத் தடுக்க செக்டார் 17 பகுதிக்கு அருகே சில பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டு பாதை அடைக்கப்பட்டது. அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பேரணிக்கு தலைமை தாங்கிய சம்யுக்தா கிஸான் மோர்ச்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், சண்டீகர் காவல்துறை துணை ஆணையரிடம் விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை பஞ்சாப் ஆளுநரிடம் சமர்ப்பிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மனு
பஞ்ச்குலாவில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள் தடுப்புகளை கடந்து முன்னேறிச் சென்றனர். எனினும் அவர்கள், சண்டீகர்-பஞ்ச்குலா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பேரணிக்கு தலைமை தாங்கிய அந்த மாநில பரதிய கிஸான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சதுனி, சம்யுக்த கிஸான் மோர்ச்சா உறுப்பினர் யோகேந்திர யாதவ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளிடம் தங்கள் மனுவை வழங்கி, ஹரியானா ஆளுநரிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
தங்கள் கோரிக்கை மனுவை அளித்த பின்னர், பேரணியில் ஈடுபட்டவர்களை திரும்பிப் போகுமாறு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க
Share your comments